ஆசை

ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கையில் வேறு வேறு ஆசைகள் இருக்கும். வீடு, கல்யாணம், குழந்தை, கார், காதல், காமம் என என்னற்ற ஆசைகள். நண்பன் ஒருவன் தன் வீட்டில் ஏசி வாங்கி மாட்டி, அந்த ரூமில் தன் பெற்றோரை தூங்க வைக்க வேண்டும் என்பது தான் ஆசை என்றான். கேட்கும் போது சிரிப்பாக இருக்கும். ஆனால் உணர்ந்து பார்த்தால் அதில் பல அர்த்தங்கள் விளங்கும். சின்னதோ பொரியதோ, எல்லா ஆசைகளும் நினைத்தவாறு,நினைத்தமாத்திரத்தில் நிறைவேறாது. 

அதேபோல எனக்கும் ஒரு ஆசை. திருநெல்வேலி ரத்னா தியேட்டரில் ஜுன்ஸ் படத்தை பார்த்து, வாழ்க்கையில் எப்படியாவது அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆசையை, ரகுமானின் இசையும், ஒளிப்பதிவும் வித்திட்டது. அதுவும் படம் முடிந்து எழுத்து போடும் போது ஒரு BGM வரும், டைட்டானிக் இசையில் கொஞ்சம் பிச்சி, தன் மூளையும் பிசைந்து ஒரு இசை விருந்து. 

அந்த ஆசை சிறிது நாட்களில் பழுத்து பழமாக மாறி, என்னை BE cse எடுக்க வைத்தது. வேலைக்கு சேர்ந்த பின்னும் அதை நோக்கிய பயணம். எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை. என் நேரம். ஒபாமா H1 lottery கொண்டு வந்தார். உழைப்பையும் சேர்த்து அதிர்ஷ்டமும் தேவைப்பட்டது. 12 வருடம் முடிந்தது. கிடைக்கவில்லை. ஆசை பேராசை ஆகி, கோபம் ஏக்கம் என மனைவி, அம்மா, தம்பி நண்பர்கள் என‌ நிறைய பேரை புண்படுத்திவிட்டேன்.

ஆனால் என் ஓட்டம் மட்டும் நிற்கவில்லை. பின்னர் ஏதோ ஒரு வகையில் என் ஆசையில் சிறிய மாற்றம் செய்து அதை நோக்கி ஓட ஆரம்பித்தேன். இப்போது Netherlandsல் தரை இறங்கிவிட்டேன். 

சத்தியமாக இந்த பதிவு பெருமை பீத்த அல்ல.

"அவனால் முடிகிறது என்றால் என்னால் முடியும்.
என்னாலயே முடிகிறது என்றால் கண்டிப்பாக உன்னாலும் முடியும்"

நாம் ஒன்றை நினைத்து வாழ்க்கையில் தேங்கி நிற்காமல், ஓடிக்கொண்டே இருப்பது தான் நல்லது. அண்ணன் சீமான், ஹிட்லர் சொன்னதாக சொல்லிய, ஆனால் மார்டின் லூதர் கிங் சொல்லிய ,
"If you can't fly then run, if you can't run then walk, if you can't walk then crawl, but whatever you do, you have to keep moving forward". நம்புவோம். நகர்வோம். வாழ்க்கை வாழ பழகுவோம்.



மனிதம் - சிறுகதை

நாங்கள் கொடுத்த  report -ஐ டாக்டர் படித்து கொண்டிருந்தார். அந்த அறை முற்றிலும் குளிரூட்டபட்டிருந்தது. வெள்ளை அறை. நடு நிசி இரவின் அமைதி. அறையின் ஒரு ஓரத்தில் மருந்தும், injection-னும் வைக்க fridge இருந்தது. அருகே ஒரு பெரிய மீன் தொட்டி. அதில் ஒரே ஒரு நீளமான மீன். கடந்த ஒரு வருடமாக இங்கு வருகிறேன். எப்பொதும் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக எதை நோக்கியோ விடாமல் நீந்துகிறது. தன் உணவைவிட கண்டிப்பாக வேறு ஒன்றை தேடித் தான் நீந்திக் கொண்டிருக்கிறது. இஞ்சினியரிங் படித்து computer முன்னால் வேலை செய்யும் ஆட்டு மந்தையில் இருந்து விலகி, திரைக்கடலில் என் லட்சியத்தை நோக்கி நீந்தும் என்னை போல.

டாக்டரின் டேபிளில் சின்ன சாய் பாபா சிலை. என்னை அருளிக் கொண்டிருப்பது போல் அமர்ந்திருந்தார். அம்மாவிற்கு எதுவும் இருக்க கூடாதென நானும், தன்னால் மகனுக்கு எந்த கவலையும் வர கூடாததென அம்மாவும் வேண்டிக் கொண்டிருந்தோம். அப்பாவின் இறப்பிற்கு பிறகு எனக்கு அம்மா தான் ஓரே ஆறுதல். அம்மாவிற்கு நான்.

டாக்டர் ஆரம்பித்தார்.
"முன்னாடி சொன்னது தான்.  cirrhosis. முன்னாடிக்கு இப்ப Liver ரொம்ப damage ஆகிருக்கு. Infection-னும் அதிகமாகிருக்கு. மாத்திரைல அந்த damage recover ஆகல.உங்க வயசு என்னமா?" என்றவாரே report-ல் வயசை தேடினார்.

அதற்குள், "51-ங்க" என்றாள் அம்மா

"51 is not bad. ஒரு surgery பண்ண வேண்டியது இருக்கும். அது பண்டிட்டு, கொஞ்சம் diet maintain பண்ணி careful-ஆ இருந்தா கண்டிப்பா liver recover ஆகும்."

"என்ன surgery சார்?" என்றேன்

" 'Auxiliary partial Orthotopic Liver Transplant' னு சொல்வாங்க. உங்க அம்மாவோட liver-ல damaged part மட்டும் remove பண்ணிட்டு, donor-ஓட liver-ல கொஞ்சம் மட்டும் எடுத்து ஒட்ட வைக்கனும்.  Her Liver will adapt it and regain its function."

"எவ்வளவு செலவாகும்? "

"25ல இருந்து 30 லட்சம் வர ஆகலாம்." இதை கேட்டவுடன் அம்மா ஓவென அழ ஆரம்பித்தாள். என் தொண்டையும் அடைத்து கொண்டது.

"கவலபடாதிங்கமா..எல்லாம் சரியாகிரும்.", என்றார் டாக்டர்.

அழுது கொண்டே அம்மா, "சார், ஆப்ரேசன்லாம் வேணாம். வயித்த வலிக்கு மட்டும் மாத்திரை தாங்க போதும். என் பையன் பாவம்" என்றாள்

டாக்டர் தர்மசங்கடத்தில் நெளிந்தார். சுதாரித்து கொண்டு, "அம்மா, நீ வெளிய இரு. நான் பேசிட்டு வரேன். மாமாக்கு கால் பண்ணி கூப்பிடு" என்று அம்மாவை வெளியே அனுப்பினேன்.

"டாக்டர், surgery இல்லாம முடியாதா?"

"அதன் நானும் try பண்ணோன். But liver regain ஆகலயே. இப்படியே விட்டா கொஞ்ச நாள்ல infection liver full-லா பரவிரும். அப்பறம்  surgery பண்ணா கூட சரி பண்ண முடியாது.early stageல காப்பாத்துன தான் நல்லது. இப்ப இந்த tablet போடுங்க. 2days-ல admission போட்டுருங்க." மருந்து சீட்டு வாங்கி கொண்டு வெளியே வந்தேன்.

வெளியே அம்மா அழுது கொண்டு இருந்தாள்.

"அழாதமா. நான் இருக்கேன்ல. மாமா  வராங்களா?"

"அவன் சாப்பாடு எடுத்துட்டு வீட்டுக்கே வரானாம்" என்று கண்களை துடைத்து கொண்டே சொன்னாள்.

வீட்டிற்கு வந்தோம். இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. எவ்வளவு சமாதானம் சொல்லியும் அம்மாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை.இந்த operation பண்ணுவதால், உடல் வலி ஒரு புறம் இருந்தாலும், பணம் எப்படி புரட்டுவது. அது தான் எங்கள் இருவர் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது. என் திரை ஆர்வத்தை ஊக்குவித்த ஓரே ஆன்மா அம்மா மட்டும் தான். ஆனால், டாக்டர் ரூமில் இருக்கும் மீன் போல நோக்கம் சரியாக இருந்தாலும் திசை தெரியாமல், தொடக்க புள்ளி இல்லாமல், அதற்கு வழியும் இல்லாமல் அலையும் உயிர் நான். கடவுள் கூட ஏழை, பணக்காரன் வித்தியாசம் தெரிந்து வரிசை தகுதி வைத்து ஆசீர்வதிக்கிறார். ஆனால் நோயிக்கு தான் தகுதி தெரியவில்லை. அம்மா மடியில் படுத்து யோசித்து கொண்டே தூங்கிவிட்டேன்.

மாமா வந்து சத்தம் கொடுத்தார். இரண்டு tiffin carrier  கொண்டு வந்தார்.

"என்னப்பா இதுக்கே இப்படி படுத்துட்ட. வாழ்க்கைல இன்னும் நிறைய இருக்கு. முதல்ல சாப்பிடு. மத்தத எல்லாம் அப்பறம் பாக்கலாம். இந்தா இது உனக்கு.  அக்கா இது உனக்கு உப்பு  இல்லாம." என ஆளுக்கு ஒரு carrier கொடுத்தார்.

முகம் கழுவி, லுங்கியை மாற்றி சாப்பாடு தட்டின் முன் அமர்ந்தேன். சாம்பாரும் பொரியலும் இருந்தது. சாப்பிட்டு கொண்டே, "மாமா, எங்கட்ட இருக்கிற ஓரே சொத்து இந்த வீடு தான்.  இத வித்தரலாம். ஒரு 10 ,12 லட்சம் எடுத்தரலாம். மீதி பணம் எப்பிடியாது புரட்டனும்."

"வீட்ட ஏன் விக்கனும். வேற ஏதாவது பண்ண முடியுதானு பாக்கலாம் " என்றார் மாமா.

"வேற என்ன இருக்கு எங்கிட்ட" என்று சொல்லும் போதே அழுகை வந்தது. அம்மாவும் அழுதாள்.

"சதீசு, தைரியமா இரு. அம்மாக்கு நீ தான் தைரியம் சொல்லனும். நீயே அழலாமா. " என்றார் மாமா.

"இந்த வீட்ட வித்து,  இவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிரலாம்ப்பா. எனக்கு ஆப்ரேசன்லாம் வேணாம்.  நான் நிம்மதியா போய்ருவேன்" என்றாள் அம்மா.

காசும் இல்லாமல் வேலையும் இல்லாமல் கையாலாகாத தன்மையை நினைத்து மனம் வலித்தது. அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு தினேஷ் வந்தான். என் உற்ற நண்பன்.
"மாப்ள. எப்படி யாசும் 2,3 லட்சம் புரட்டி குடுக்குறன்."

அதற்குள் மாமா "தம்பி இந்த facebook whatsappல லாம் msg வருதே. உடம்பு சரி இல்ல காசு குடுங்கனு. அது மாதிரி netல போட்டு விடுங்க."

சரியேன தினேஷ் அவனுக்கு தெரிந்த குருப் எல்லாவற்றிலும் msgஐ அனுப்பினான். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. கொஞ்ச நேரத்தில் தினேஷோடு பணம் புரட்ட கிளம்பினேன். பணம் நிலத்தடி நீர் போல எந்த இடத்தில் எவ்வளவு இருக்கும் என தெரியாது. யாரிடம் எவ்வளவு கேட்டாலும் 'அவ்வளோ காசா..' என வாயை பொளந்தார்கள்.  அன்று இரவுக்குள் 2லட்சம் திரட்டினோம்.

அடுத்த நாள் மாமா அத்தையோடு வந்தார். மஞ்ச பையில் இருந்து 15 லட்சத்தை எடுத்து வைத்து, "நம்ம வித்யா கல்யானத்துக்கு சேத்து வச்சது. இத நீயே வச்சுக்கோ. அம்மாக்கு சரியாகி கொஞ்ச நாள் அப்பறம் அவள உனக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று அத்தையை பார்த்தார்.

அத்தை ஆரம்பித்தார். "அப்பிடியே சினிமாலாம் விட்டுட்டு, நீ படிச்ச படிப்புக்கு வேலை தேடி settle ஆகிரு."

என் வீட்டை தவிர விற்பதற்கு என்னிடம் இன்னொன்று இருப்பது புரிந்தது. ஆனால் அதன் விலை தான் அதிகம். என் கனவு.

" எனக்கு கொஞ்சம்  time வேணும்" என்று வெளியே கிளம்பினேன்.

மண்டைகுள் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது. தலை கணத்தது. ஒரு டீ கடையில் தம்மை பற்ற வைத்து டீ சொன்னேன். திடீரென்று ஒரே சத்தம். ஒரு பெரியவர் மீது ஒரு புல்லட் உரசிய படி நின்றது. நிலை தடுமாறி பெரியவர் கீழே விழுந்தார். புல்லடோடு ஓட்டுனரும் விழுந்தார். அங்கு நின்ற அனைவரும் அவர்களுக்கு உதவ ஓடினோம். கீழே விழுந்த புல்லட்டை நானும் ஓட்டுனரும் தூக்கி நிறுத்தினோம். அதற்குள் அந்த பெரியவர் , "தேவடியா பயா. மொதுவா வரமாட்டியா.. " என்று வார்த்தையை விட்டார். கோபம் வந்த ஓட்டுனர் அவரிடம் சண்டை போட சொல்ல, நான் வண்டியை stand போட்டேன்.

அப்போது petrol tank மேலே உள்ள பையில் ஒரு கவர். கவரின் பாதி வெளியே வந்திருந்தது. உள்ளே அவ்வளவும் பணம். 2000ருபாய் கட்டுகள். எனக்கு அதில் என் அம்மா மட்டும் தான் தெரிந்தாள். அங்குள்ளவர்கள் அனைவரும் சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அந்த விநாடியில் எனக்கு வேறு எதும் தோன்றவில்லை. மனிதன் மிகவும் கொடுரமானவன். அவன் மனம் மிகவும் சுயநலமானது. இறுதியில் அவனும் மிருகமே. அந்த கவரை எடுத்து சட்டைக்குள் போட்டு இடத்தைவிட்டு நகர்ந்தேன்.

குற்றவுணர்வு வளர்வதற்குள் எடுத்த பணத்தை மருத்துவமனையில் கட்டிவிட வேண்டும் என ஓடினேன். மருத்துவமனையில் பணத்தை கட்டி, டாக்டரை பார்க்க வேண்டும் என கேட்டேன்.

ரூம் உள்ளே சென்று டாக்டரிடம் காசை குறைக்க கெஞ்சினேன். தன் feesஐ தான் தன்னால் குறைக்க முடியும் என்றும்.  Hospital feesஐ குறைக்க management தான் முடிவு செய்ய வேண்டுமென சொன்னார். பேசி முடித்து கிளம்பும் போது அந்த மீன் தொட்டியை பார்த்தேன். மீன் இல்லை.

"டாக்டர் அந்த மீன்....?"

"அது இறந்துருச்சுங்க.. "

The one with absurdity - P1

"சார் யாராது இருக்கீங்களா... சார்... ஹலோ....". யாரோ கத்தி கொண்டு இருந்தார். விழித்துக் கொண்டு எழுந்தேன். என் அறையில் நான் இல்லை. வெள்ளை வெளீர் நிறத்தில் அறை. சுற்றிலும் பார்தேன். கதவுகளோ ஜன்னலோ இல்லை. சொல்ல போனால் ஒரு சின்ன தூசி கூட இல்லை.  பளிச் என்று கண்ணை பறித்தது.அங்கு 3 பேர் மட்டும் இருந்தனர்.  கத்திக் கொண்டு இருந்த பெரியவர் அருகில் இன்னொருவர் சுவற்றில் தடவியபடி எதையோ தேடிக் கொண்டு இருந்தார். ஒரு ஓரத்தில் இன்னொருவர் அமர்ந்து எங்களை கண் அசையாமல் அப்படியே பார்த்துகொண்டு இருந்தார். பயம் பற்றி கொண்டது. மொபைல் போனை தேடினேன். காணவில்லை. கையில் பர்ஸ், கடிகாரம் உட்பட ஏதும் இல்லை. யார் இவர்கள். எப்படி இங்கு வந்தேன். இது என்ன இடம். ‌ கடத்தி இருப்பார்களா? என்னை எதற்கு கடத்த வேண்டும்? பயத்தோடு ஆயிரம் கேள்விகள் எழுந்தன. கண்ணை கசக்கி கொண்டே தைரியத்தை வரவழைத்து எழுந்தேன்.

அலறிக் கொண்டிருந்த பெரியவர் அருகில் சென்று, "சார், கொஞ்சம் கத்தாதிங்க. அமைதியா உக்காருங்க. என்னன்னு பாக்குறேன்".

"இல்லப்பா. ரொம்ப நேரமா தட்டுறேன். யாரும் திறக்கல. அட்லீஸ்ட் சத்தமாசும் கொடுக்கலாம்ல. அதுவும் இல்லை." என்று அவர் புலம்ப, நான் ஏதாவது கதவு போல தட்டுப்படுகிறதா என்று தேடினேன். இன்னொருவர் வந்தார். "என்ன தம்பி கதவ தேடுறீங்களா.. ரொம்ப நேரம் தேடிட்டேன். ச்.." அலுத்துக் கொண்டார்.  பழைய எம்ஜிஆர் படத்தில் வருவது போல தோளை வைத்து இடித்தேன். எந்தவொரு அசைவும் இல்லை. 
"ஓ. சரி வேற வழி இல்ல." என்று
"ஹலோ. பிரதர்" என்று நானும்சத்தமாக தட்ட ஆரம்பித்தேன்.
"ஜீ , கேக்குறீங்களா. நானே ஒரு டம்மி பீஸு. என்னையலாம் கடத்தி வச்சு வேஸ்ட். என் அப்பா அம்மாட்ட கேட்டா, 'பரவால இனிமே ஒரு அலாக்கு கம்மியா போடுவேன்' னு சொல்லிட்டு போய்டே இருப்பாங்க. காசுலாம் கூடுக்கமாட்டான்யா.‌‌" கொஞ்சம் நிதானித்து,"சரி என்ட ஒரு KTM பைக் இருக்கு . அத வச்சுக்கோங்க. சார் கேக்குதா. யோவ் ஏதாவது சொல்லுயா" எந்த அசைவும் இல்லை. நம்பிக்கை தேய்ந்து அமர்ந்தேன்.

நெற்றி நிறைய நல்ல பட்டை அடித்து அருகில் அந்த பெரியவர் அழ ஆரம்பித்தார்.  எனக்கும் அழுகை முட்டியது. இன்னொரு பெரியவரும் கதவை தேடி அலுத்து கொண்டு எங்கள் அருகில் அமர்ந்தார். 

"சார் நம்மல கடத்திருக்காங்கனா, நம்ம எல்லாத்துக்கும் காமன்னா ஒன்னு இருக்கனும். அது என்னன்னு தெரியனும். சரி. என் பேரு கார்த்திக். திருநெல்வேலி ஊரு. வேலைலாம் இல்லை. சும்மா தான் இருக்கேன். நீங்க உங்கள பத்தி சொல்லுங்க தாத்தா."

"திருச்சிற்றம்பலம்." என்று கண்ணை மூடி நிதானித்து கண்ணீரை துடைத்து, "என் பேரு அருணாசலம். ஊரு கும்பகோணம் பக்கம். கலெக்டர் ஆபீஸ்ல வேல பாத்தேன். ரீடயட் ஆகி 13 வருஷம் ஆச்சு" 

"சார் நீங்க சொல்லுங்க"

"நான் ஶ்ரீராம். I was once a scientist at ISRO.  I am also retired. இப்ப சும்மா engineering college la guest lecture குடுக்குறன்.எனக்கு சென்னை தான்" 

"அண்ணே நீ சொல்லு." என்று கீழே அமர்ந்தவரை கேட்டேன். வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தவன் எந்த சலனமும் இல்லாமல் என் பக்கம் திரும்பி பார்த்தான். கண் சிமிட்டவே இல்லை. 

"என்ன பாக்குற. சொல்லு. இங்க இருந்து போகனும்ல." எந்த பதிலும் சொல்லாமல் திரும்பி கொண்டான். அவன் அருகில் சென்றேன். நாற்றம் குடலை புடிங்கியது. "யோவ் தண்ணி அடிச்சு காண்ல (சாக்கடை) விழுந்து இருந்தியா? ஓ*தா நாத்தம்... " என்று மூக்கை மூடியபடி,"சொல்லுயா. எந்த ஊரு. என்ன பண்ற?" பதிலளிக்கவில்லை. இவன் கூட நம்மை கடத்துவார்களா? கண்டிப்பாக ஏதோ தப்பு நடந்திருக்கிறது.‌ 

"போயா லூசு.." என்று எழுந்து மற்றவர்களை பார்த்து "கடசியா எங்க இருந்தீங்க‌?" என்று 

"அத தான் நானும் recollect பண்ண try பண்றேன் முடியல." என்றார் ஶ்ரீராம். 

"எனக்கும் மறந்துட்டு" என்றார் தாத்தா.

நானும் யோசிக்க ஆரம்பித்தேன். ஞாபகம் வரவில்லை. நேரம் கடந்தது‌. நிசப்தம். என் மனதில் எந்த சிந்தனையும் ஓடவில்லை. 

திடீரென மேல் கூரை திறந்தது. சில்லேன்ற குளிர்ந்த காற்று. சத்தம் கேட்டு வெடுக்கென்று எழுந்து மேலே பார்த்தோம். 

ஆகாயம்.‌ கரிய அண்டம் தெரிந்தது. ஆங்கில படத்தில் வருவது போல வெள்ளை முட்டையாக பல capsule-கள்  ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்தது. 

- தொடரும்

(அடுத்த வாரம் இந்த கதையை தொடர்கிறேன்)

Performance - சிறுகதை

காலை ‌9 மணி தாண்டிவிட்டது. அலுவலகத்திற்கு சீக்கிரம் செல்ல வேண்டும். அவசர அவசரமாக அம்மா போட்ட சூடான காபியை விறுவிறுவென்று விழுங்கி, டீவி பார்த்துக் கொண்டு இருந்த அப்பாவிடம் 'bye' காட்டி! புதிதாய் வாங்கிய KTM பைக்கை எடுத்து ஆபீஸ்க்கு ஓடினேன். OMR தான்டி சோழிங்கநல்லூர் சிக்னலில் நிற்கும் போது ஒருவன் என்னை நோக்கி ஓடி வந்து ஏதோ கேட்டான். கார், பைக் இரைச்சலில் அவன் பேசுவது கேட்கவில்லை. ஒரு பக்க ஹெல்மெட்டை விளக்கி "என்ன?" என்றேன்.

"bro, time ஆய்ருச்சு. என்ன st.joesph college கிட்ட இறக்குறீங்களா? அத தாண்டி தான போறீங்க?"

"ம்" என்றவாறு கையசைத்து பின்னால் அமரச் சொன்னேன்.

அவ்வளவு பேர் அங்கு நின்ற போது நேரடியாக என்னை நோக்கி வந்து உதவி கேட்டது ஒர் கர்வத்தை கொடுத்தது. ஏக பெருமிதத்தோடு சுற்றி இருப்பவர்களை பார்ப்பதற்குள் சிக்னல் விழுந்தது. இரைச்சலை கிளப்பிவாறு பைக்கை எடுத்தேன்.

கொஞ்ச தூரம் போன பின் கழுத்தில் ஏதோ குத்துவது போல உணர்வு. திரும்ப முயல, பின்னால் இருப்பவன் ‌கழுத்தை நெருக்கி கொண்டு காதருகில் வந்து "correct ஆ cervical nerve ,thoracic nerve join ஆகுற இடத்துல கத்தி வச்சுருக்கேன். லேசா அசஞ்சாலும் இரக்கிருவேன். "

அடுப்படியில் இருப்பது போல முகம் முழுவதும் சூடாக உணர்ந்தேன். "brother ஏதாவது குழில இரக்கும் போது கை நழுவி சொருவிறாதீங்க. சத்தியமா அசையமாட்டேன்."

"மூடிட்டு ஓட்றா மயிரு" என்றான்

"மூடிட்டு தான் ஓட்ட முடியும். வேற என்ன பண்ண?. பெரும மயித்துக்கு உன்ன... " , கத்தி குத்து வலுவானது புரிந்து "சாரி. உங்கள பைக்குல ஏத்தி...ம்... மூடிட்டே ஓட்டுறேன்"‌ 

கொஞ்ச தூரம் எதுவும் பேசாமல் அமைதியாக போனது. மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.
"brother, நீங்க டாக்டரா. spinal cord பேரு, நரம்பு பேருலாம் சொல்றீங்க." என்று கேட்டேன்.
அவன் ஏதும் சொல்லவில்லை. பார்ப்பதற்கு சின்ன பையனாக இருப்பதால்,
"உங்களுக்கு பண கஷ்டமா. college fees கட்டணுமா? அதுக்கு தான் இப்ப நிறைய website இருக்கே brother. அதுல போட்டு fund raise பண்ணலாமே.." என்பதற்குள், "அந்த ஆலமரம் பக்கத்துல நிறுத்து" என்று இடது பக்கத்தில் இருந்த ஆளில்லா இடத்தை காட்டினான்.

பைக்கில் இருந்து இறங்குவதற்குள் என் தோளில் கை போட்டு சங்கில் கத்தி வைத்தான். அது மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தி. பக்கத்தில் இருந்த சந்துக்குள் நடக்க தொடங்கினோம்.அங்கு யாரும் இல்லை தூரத்தில் எதிர்புறத்தில் பெரிய தெரு இருப்பது தெரிந்தது. அவன் ‌சைசும் கத்தியும் பார்த்தால் கண்டிப்பாக கல்லூரி மாணவனாக தான் இருப்பான்‌ என்று தோன்றியது. இவனை எப்படியாவது ஏமாற்றி தப்பிக்க வேண்டும் என்று எண்ணி  மெதுவாக,"தம்பி, எந்த காலேஜ்ல படிக்கிறீங்க? நானும் கஷ்டப்பட்டற family தான். இப்ப தான் கடனுக்கு இந்த பைக் வாங்கிருக்கேன். இன்னும் due கூட‌ கட்டல"
அவன் பேசவில்லை.கொஞ்ச தூரம் நடந்தோம். "உங்களுக்கு ரொம்ப நாள் கல்யாணம் ஆகாத அக்கா இருக்கா... அதுக்கு தான் திருடுரீங்களா?" என்றதும் அவன் என்னை ஒரு நொடி உற்றுப்பார்த்து திரும்பி கொண்டான். என் மனதில் "அக்கா sentiment workout ஆகுது" என்று உள்ளுக்குள் நினைத்து, "எனக்கும் அக்கா இருக்கங்க brother.. அவங்க கல்யாணத்துக்கு தான் காசு சேக்குறேன். உங்க கஷ்டம் புரியுது" என்றேன்.

அதற்குள் "என்னடா இவன்ட கத பேசிட்டு வர" என்று sideல்‌ இருந்து மேலும் 2 பேர் சுவர் தான்டி எங்கள் முன்‌‌ குதித்தார்கள். எல்லோரும் kerchiefஆல் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தார்கள். என் தோளை அழுத்தி முட்டி போட வைத்தனர். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. 3 பேருமே ஒரே மாதிரியான ஆடை அணிந்து இருந்தனர். கண்டிப்பாக இவர்களும் College பசங்களாக தான் இருப்பார்கள் என்று "ஒன்னும் இல்ல தம்பி. நானும் கஷ்டபடுற family தான், பாவம் பாத்து விட்டுருங்கனு சொன்னேன்."

சொத்!!!! என் கண்ணத்தில் அறைந்தான். அவன் அடித்தது வலிக்கவில்லை. சிறுவர்கள். அதனால் கோபம் தலைக்கு ஏறியது. ஆனால் 3வரிடமூம் கத்தி, ஆயுதங்கள் இருக்கிறது. பொறுமையாக பேசி ஏமாற்றினால் தப்பித்து விடலாம் என்று தோன்றியது.

சுதாரிப்பதற்குள், "பர்ஸ், செயின், மோதிரம்-லாம் கழட்டு" என்றான் என் முன்னால் நிற்பவன். 

"நானும் கஷ்டபடுற familyதான்..." என ஆரம்பிக்கும் முன்பே , "ஓத்தா கழட்றா" என்று என் நெஞ்சில் கைவைத்து தள்ளி அவன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து இன்னொரு கத்தியினை எடுத்து நீட்டினான்.

எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. யோசிப்பதற்குள் அதில் ஒருவனுக்கு போன் வந்தது."காலையில் தினமும் கண் விழித்தால் கை தொடும் தேவதை அம்மா!!!" ரிங்டோன். இவனுக்கு அம்மா sentiment workout ஆகும் என்று நினைத்து கொண்டேன். அவன் போனில் ஏதோ முனுமுனுத்து,அதை அணைத்து விட்டு என்னிடம் வந்தான்."கழட்டுறீயா இல்லையா?" என்றவாறு கத்தியை கழுத்தில் வைத்தான்.

"தம்பி, என் அம்மாக்கு ரொம்ப நாளா ஆஸ்த்துமா. அவங்க treatment க்கு தான் கஷ்டப்பட்டு காசு சேக்குறேன்." என்று முகத்தை பாவமாக வைத்து என் பர்ஸை எடுத்து அவனிடம் கொடுத்தேன். அவன் என்னை கண்டுகொள்ளாமல்,"செயின் மோதிரத்தையும் கழட்டு" என்றான்.

செயினை கழட்ட முயன்ற போது "அக்கா sentiment" நினைவு வந்தது. பின்னால் நின்றவனை பாவமாக பார்த்து, "இந்த செயின் மோதிரலாம் அக்கா கல்யாணத்துக்கு சேத்தது" என்று கண்ணீர் வருவது போல் கண்ணை கசக்கி நகையை கழட்டி அவனிடம் கொடுத்தேன். அவன் அதை வாங்க யோசித்தான்.sentiment workout ஆவதை உறுதி செய்து இன்னும் performanceசை கூட்டினேன். "என் அப்பா ‌இப்ப தான் இறந்து போனாங்க. நான் தான் என் குடும்பத்தில வேலை போற ஒரே ஆளு" என்று வீட்டில் 'பாரதி கண்ணம்மா' re-telecast பார்த்து கொண்டிருக்கும் அப்பாவிடம் மனதிற்குள் மன்னிப்பு கேட்டு கொண்டு என் performanceசை கூட்டினேன்.

அந்த அக்கா sentiment ஆளு,"மச்சி பாக்க பாவமா இருக்கு.இவன விட்டுரலாம்" என்றான். ஆகா!! இவன் தான் என் third man. இவனை வைத்து சேதாரம் இல்லாமல் தப்பிக்கலாம் என்று மனதில் நம்பிக்கை வந்தது. செயினை என் கையில் இறுக்கமான மூடி விட்டு பாவமாக கண்ணை கசக்கினேன். மற்றவன்,"மயிரு, எல்லா குடும்பத்துலயும் கஷ்டம் இருக்கும். அதில்லாம திருட கூப்டு அடிச்சா இப்படி தான் அழுவாங்க." என்றான். கண்டிப்பாக புதிதாய் திருட ஆரம்பித்தவர்கள் என்று புரிந்தது. சரியாக performance பண்ணினால் தப்பிக்கலாம் என்று தோன்றியது.

மீண்டும் அக்கா sentiment ஆளு,"விடு மச்சி. அடுத்த வாட்டி இத விட நல்ல ஆள புடிச்சு வரேன்"

பர்ஸை வாங்கியவன் உள்ளிருந்து 200ரூ எடுத்து என்னை பார்த்தான். மீண்டும் உள்ளே விரலைவிட்டு துழாவி அவசரத்திற்கு பர்ஸின் இடுக்கில் வைத்த 2000ரூ எடுத்து கொண்டு,"சரி போய் தொல" என்று பர்ஸை முகத்தில் வீசினான்.

'2000ரூ போச்சே' என்று தோன்றினாலும் தங்கம் தப்பித்தது ‌என்று‌ மகிழ்ச்சியாக‌ எழுந்தேன். அதற்குள் அக்கா sentiment ஆளு,"அதான் next time நல்ல piece கொண்டு வரேன்னு சொல்லிடன்ல."என்று 2000ரூ-யை புடிங்கி என்னிடம் தந்து, "இந்தா வச்சிகோ. திரும்பி பாக்காம ஓடிடு" என்று மிரட்டும் தொனியில் சொல்ல, பயந்தது போல நடித்து ஆலமரம் நோக்கி நடக்கத் தொடங்கினான். மனதிற்குள்,"small boys" என்று சிரித்தவாறு கழட்டிய நகைகளை அணிந்தவாறு ஓட தொடங்கினேன்.

ஆலமரம் பக்கத்தில் பைக்கை இல்லை. புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தேன். தூரத்தில் என் பைக்கை ஒருவன் ஓட்டிக்கொண்டு இருந்தான். சந்துக்குள் எட்டுப் பார்த்தால், அந்த 3பேரும் தலைதெறிக்க ஓடிக் காணாமல் போயினர். 

"அட பாவிகளா!!"

Squid Game

வேறு மொழி படங்கள் பார்த்தால் குறட்டை விட்டு தூங்கி விழும் ஆள் நான். ஒரு முறை ஹாஸ்டலில் 300 படத்தில் ‌பிட்டு இருக்கும் என்று ஆசை காட்டி பார்க்க வைத்தார்கள்.‌ஆனால் எழுத்து ‌போட்டு முடியும் முன்பே தூங்கிவிட்டேன்.பல நாட்கள் கழித்து ஐடியில் வேலைக்கு சேர்ந்த பின் பல கஸ்டமர்களிடம் பேசும் போது அவர்களின் மொழியும், மொழிநடையும் புரியாமல் முழி பிதுங்கி நின்ற போது, என் நண்பன் டேனி ஆங்கில படங்களை பார்க்க சொன்னான். முக்கியமாக ஆங்கில தொடர்கள். அதில் தான் சரியான(Native) மொழிநடை உபயோக படுத்தி இருப்பார்களாம்.‌ ஆங்கிலப் படங்களில், மற்ற நாடுகளிலும் ஓட வேண்டும் என்பதால் மொழி வார்த்தைகளை தெளிவாக உச்சரித்து உபயோக படுத்தி இருப்பார்களாம். அப்படி சீரியல் பார்க்க ஆரம்பித்து பல ஆங்கில மற்றும் பிறமொழி தொடர்களை பார்த்து பழகி, இப்போது தினமும் ஏதோ ஒரு சீரியல் பார்த்துவிட்டு தான் தூங்குகிறேன். அப்படி பார்த்ததில் சில சிரிக்க வைக்கும் சில அழ வைக்கும். சில வகை சீரியல்கள் நம்மை மிகவும் பாதித்தது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி சமீபத்தில் நான் பார்த்து என்னை பாதித்த தொடர் squid game எனும் கொரியன் சீரியல்.

concept simple தான்.அதிக பண தேவை /ஆசை இருக்கும் சிலரை ஒரு தீவில் அடைத்து வைத்து,Bigg Boss போல Game/Tasks கொடுக்கப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த நிலைக்கு (level) செல்கிறார்கள்.தோற்பவர்கள் game-ல் இருந்து வெளியேற்றபடுகிறார்கள். ஒவ்வொரு நிலையிலும் game கடுமையாக்கப்படுகிறது. இதில் இறுதி வரை நின்று வெற்றி பெற்றவருக்கு பில்லியன் கணக்கில் பணம் பரிசாக வழங்கப்படுகிறது. கேட்பதற்கு விஜய் டிவி காமெடி நிகழ்ச்சியில் வருவது போல simple ஆக இருக்கும். ஆனால் அதில் ஒரு twist. தோற்றவர் விளையாட்டில் இருந்து மட்டுமல்லாது இரக்கம் இல்லாமல் உலகத்தில் இருந்தே வெளியேற்றப்படுகிறார்கள். in other words, தோற்றவர் கொல்லப்படுகிறார்கள்.  இந்த விளையாட்டை நடத்துபவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து தங்கள் அடையாளத்தை மறைத்து வைத்து கொள்கிறார்கள். இதை நடத்துபவர் host ஆகவும், ஒவ்வொரு game-மையும் வழி நடத்தி செல்பவர் Front Man ஆகவும் இருக்கிறார். மேலும் உயிரை பணயம் வைத்து மனிதர்கள் விளையாடும் இந்த game-மை பந்தயம் கட்டி ஒரு சில பார்க்கிறார்கள். அவர்கள் VIP-களாக காட்டுகிறார்கள். இறுதியில் யார் host, ஏன் இப்படி நடக்கிறது, யார் இதில் survive ஆகிறார் என்பதே மீதிக்கதை.

இந்த கதையில் என்னை மிகவும் பாதித்தது அந்த களம். உண்மையில் இந்த உலகமே squid game போல தான் இயங்குகிறது. மனிதர்களுக்கும் பல நிலைகளில் game/task‌-குகள் வழங்கப்படுகிறது. அந்த கதையில்  வருவது போலயே உடல் வலிமை(deok-su), மூளை வலிமை(sang-woo), மன வலிமை(kang sae-byeok) என்று பல்வேறு தகுதி பெற்ற மனிதர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள். வாழ்க்கை விளையாட்டின் ஒவ்வொரு நிலையிலும் வெற்றி பெற்றவர்கள்  அதிகாரம், பொருளாதாரம், புகழ் என்ற பல சமூக அடுக்குகளில் தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள். அந்த சமூக அடுக்குகளின் மேலே ஏறி செல்லவும், அதே இடத்தில் பிழைத்துவாழவும்(survive), இரக்கம் இல்லாமல் சக உயிரின் தோளில் ஏறி‌ அவர்களை கொன்று (not physical murder) அந்த இரத்த சகதியில் பிழைத்தெஞ்சி நிற்கிறார்கள். தோற்றவர்கள் ஏதோ ஒரு நிலையில் காணாமல்(செத்து) போகிறார்கள். 

சரி. இந்த வாழ்க்கை விளையாட்டை மேலே இருந்து நடத்தும் host யாராக இருக்க முடியும்? என் அறிவுக்கு எட்டிய வரையில் எனக்கு கற்பிக்கப்பட்ட கடவுளாக தான் இருக்கமுடியும். எனக்கு கடவுள் இருக்கிறாரா ‌இல்லையா என்பதில் பல சந்தேகங்கள் உண்டு. கடவுள் இருக்கிறார் என்பதை சொல்ல எந்த ஆதாரமும் இல்லாதது போல் கடவுள் ‌இல்லை என்று நம்பவும் என்னிடம் ஆதாரம் இல்லை.  ஆகையால் ‌கடவுள் இருக்கிறார் என்பதை நம்பியே இதை கிடக்கிறேன். ஆகவே கடவுள் தான் இந்த உலகை உருவாக்கி அதில் மனித இனத்திற்கு மட்டும் ஆறாம் அறிவு படைத்து அவனை பிழைத்தெஞ்சி வாழவைக்கிறான் என்றால் அவன் உண்மையில் நல்லவனாக எப்படி இருக்க முடியும். அந்த கதையில் வரும் host/front man போல வில்லனாக தானே இருக்க முடியும். நல்லவனாக இருந்தால்,   கொரோனா-வால் பாதித்த தாய் ,தந்தை, மனைவி மற்றும் மகனுக்காக remdesivir injection வாங்க அலையும் மனிதனை , வானத்தின் மேலே பெரிய திரையில் பார்த்து பந்தயம் கட்டும் ‌ஆளாக இருக்க முடியுமா. மத வெறியில் கொல்லப்படும்‌‌ உயிரை பார்த்து ரசிக்கும் ஆளாக எப்படி இருக்க‌ முடியும். சாதிய வேற்றுமையில், காதலை நசுக்கி தண்டவாளத்தில் போடும் போது அந்த player-ரின் பெயரில் piggy back-ல் பணம் கொட்டவைக்கும் ஆளாக இருப்பானா? மேலே சொன்ன எதற்கும் எனக்கு விடை தெரியவில்லை. அதற்காக கடவுள் இல்லை என்று சொல்லவும் முடியவில்லை. உண்மையில் அப்படி சொல்ல பயமாக இருக்கிறது. தவறை தட்டி கேட்க மேலே ஒருவன் இருப்பது தெரிந்தும் மனிதன் இவ்வுலகில் தவறு செய்கிறான். இல்லை என்றால்.? ஆகவே இன்று வரை கடவுள் இருக்கிறார் என்றே நம்புகிறேன். கடவுள் நல்லவனாக இருக்கவே விரும்புகிறேன். 

squid game-ல் உடல் வலிமை(deok-su), மூளை வலிமை(sang-woo), மன வலிமை(kang sae-byeok) என்று பல்வேறு வகையான மனிதர்கள் விளையாடிய போதும், இறுதியில்/இறுதி வரை மனிதத்தை கடைபிடித்த gi-hun தான் வெற்றி பெறுவான். வெற்றி பெற்ற பின்னர் இரத்த சகதியில் கிடைத்த பணத்தை பயன்படுத்த முடியாமல் குற்றவுணர்ச்சியில் வருந்துவான். ஆனால் நாம் பிழைத்து வாழ செய்யும் செயல்களுக்கு எந்த ஒரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வாழ்வை கிடக்கிறோம் இருக்கிறோம்.

இந்த சீரியலில் இருந்து நான் கற்ற ‌பாடம், மனித விளையாட்டுகளில், பிழைத்தெஞ்சி (Survival) உலகினில் நிற்க பல strategy-கள் பின்பற்றினாலும், முடிந்த வரை சாதி‍, மதம், இனம், மொழி, பாலினம், நிறம் மற்றும் பொருளாதார வேறுபாடுகள் இன்றி மனிதத்தன்மை கொண்டு வாழ்வோம்.!!! இறுதியில் மனிதமே வெல்லும்..

சுரேஷ் அண்ணன்

பொதுவாக அரசியல்வாதிகள் என்றவுடன் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் கையில் பருத்த மோதிரமும், சட்டை‌பையில் எல்லோருக்கும் தெரியும்படி அவர் அவரின் தலைவர் புகைப்படமும், சுற்றி முரட்டு ஆட்களும், கூடவே 4-SUV காரில் அலப்பறையை குடுத்து சாலையில் ஆர்ப்பாட்டத்தோடு நம்மை கடந்து செல்லும் பிம்பம் தான் நினைவுக்கு வரும்.

இப்போதைய அரசியல் சூழலில் மேற்சொன்ன எந்த template-க்குள்ளும் சிக்காமல் இன்றும் ஒருவர் களமாடுகிறார் என்றால் நம்ப முடிகிறதா? இருக்கிறார்.

நெல்லை தொகுதி‌யின் சிட்டிங் MLA, தற்போது திமுக வின் நெல்லை தொகுதி‌ வேட்பாளராக போட்டியிட்டும்  திரு.ALS.Lakshmanan.

வாழ்க்கை முறையிலும், அரசியலிலும், பழகுவதற்கும் எளிய மனிதர்.தன்னை நெருங்க ஏதுவாக, மக்கள் பணியானாலும், கட்சி பணியானாலும் தனியே இறங்கி வேலை செய்வார்."Down to earth"ன் தமிழாக்கம் தேடுகிறேன். "MLA வ பாக்கனும்ன first அவர பாருங்க இவர பாருங்க" என்பது போன்ற, தன்னை சுற்றி எந்த வளையம் இல்லாமல்,யாரும் எப்பொழுதும் தொடர்பு கொள்ள கூடியவர்.  

இதை சொன்னால் இன்னும் விளங்கும்.போன 2016-ல் வெற்றி பெறும் வரை அவரிடம் இருந்தது hyundai eon car. வெற்றி பெற்ற பின்னர், எல்லோரின் வற்புறுத்தலின் பேரில், அடிக்கடி சென்னைக்கு கட்சி தோழர்களை கூட்டி செல்ல ஏதுவாக Duster வாங்கினார்.அதுவும் கடனில்.இன்றும் அதற்கு ‌வட்டி கட்டி கொண்டிருக்கிறார். சந்தேகம் இருந்தால் அவரின் இப்போதைய வேட்புமனுவை பாருங்கள்.எளிமை to the core என்னவென்றால், சட்டபேரவை கூட்டம் நடக்கும் போது,MLA hostel-ல் இருந்து சட்டப்பேரவைக்கு ஒரு பேருந்து செல்லும்.அதில் தான் பயனிப்பார்‌. பெரியாரின் சிந்தனைகளோடு சிக்கனமும் அவருடன் ஒட்டி கொண்டது போலும்.

நான் அவரை சந்திக்கும் போது எல்லாம்,"இப்பிடியே நம் ஊர் பசங்கலாம் மெட்ராஸ் போய்டா, நம்ம ஊர யாரு பாக்குறது. நம்ம ஊரும் வளரனும்லாடே.. நம்ம வந்த அப்பறம் SIPCOT கொண்டு வரோம்... உன்ன மாதிரி பசங்க லாம் நம்ம ஊரலயே வேல செய்ய ஏற்பாடு பண்றோம்..". தீர்க்கமான தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்.எதிர் கட்சியாக தன்னால் முடிந்த வரை தொகுதிக்கு செய்திருக்கிறார்.முடிந்த வரை அனைத்து சட்டப்பேரவை கூட்டத்திலும் கலந்து தன் கோரிக்கைகளையும் கருத்துகளையும் தெரிவித்திருக்கிறார். இவரைப் போன்று அரசியலில் களமாடுபவர்கள் நிச்சயமாக வெல்ல வேண்டும்.வெல்வார்.

Politics is not a easy thing. சில நேரங்களில் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ள அனைவரையும் காயப்படுத்தும். ஒரு சில அரசியல்வாதிகளை தங்களின் நண்பர், உறவினர் என்று வெளிக்காட்டிகொள்ளாத/வெளிக்காட்ட முடியாத பலரை பார்த்திருக்கிறேன். ஆனால் ALS.Lakshmanan@Suresh அண்ணன் எங்களை எந்த தர்மசங்கடத்திற்கும் ஆளாக்கவில்லை. இன்றும் காலரை தூக்கி சொல்கிறோம். நாங்கள் ALSபாசறை-யில் இருந்து வந்தவர்கள். And Yes, we belong to Dravidian Stock.

மாலை பொழுதின் மயக்கத்தில்

"மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே"

ஒரு நாள் தனியாக ‌காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தேன்.‌ எப்போதும் போல driving-ல் ராஜாவின்‌ playlist  தான் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென ராஜா இந்த பாடலை ‌இசைத்து கொண்டிருந்தார்.. இது சேது படத்தில் கல் போல் மனம் கொண்டவனுக்கு காதல் வந்தவுடன் வரும்‌ பாடல் .
"அது என்ன மாலை நேரத்தில் காதலின் வேதனை ‌கூடுது" என‌ கேள்வி தோன்றியது. தனியாக வந்ததாலோ என்னவோ, அந்த கேள்வி மனதில் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது.

நான் பள்ளி‌ படிக்கும் ‌காலத்தில், பள்ளி முடிந்து வீடு போகும்‌ 3T பஸ்ஸில் மகேஷ் அண்ணனையும் சாரதா அக்காவையும் பார்த்து இருக்கிறேன்.  மகேஷ் அண்ணன் ஜன்னல் வழியாக school bag-யை சாரதா அக்காவிடம் போட்டு,  , அக்கா பார்க்கும் படி‌ படியில் தொங்கி கொண்டு‌ வாருவார்.‌அக்காவும் daily பஸின் படிக்கட்டில் இருந்து ‌2 ஸீட் முன்னர் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருப்பார்.  கர்சீப்பில் ஒளித்து வைத்த ponds powder முகத்தில் இருக்கும். அந்த மயக்கும் மாலையும், அவர்களுக்குள் இருக்கும் காதலும் அப்போது புரியவில்லை.அதை போல கல்லூரி காலத்தில், class முடிந்தவுடன் நானும் மனோஜும் ஜுஸ் கடையில் உக்கார்ந்து எல்லா department பெண்களை பார்க்கும் போது கூட அது காதலோ, hormones செய்யும் வேலையாகவோ தான் புரிந்தது. தவிர மாலை என்ற பொழுதிற்கும் காதலிற்கும் இருக்கும் சம்பந்தம் புரியவில்லை.

மாலை பொழுது. செம்மஞ்சள் நிறத்தில் ஊரே சூழ்ந்திருக்க, ஒரு ஓரத்தில் மங்கலாக
நிலா தெரிய, பஸ் ஸ்டாண்டு டீ கடையில் சூடாக வடை, பஜ்ஜி பொரியும் சத்தமும், பக்கத்தில் அக்கா கடையில் இட்லி வேகும் மணமும்‌, கூடவே புரோட்டா கடையில் சால்னா கொதிக்கும் ‌வாசமும் நிறைந்திருக்க மனிதர்கள் வேலை களைப்புடன், வியர்வை வாசமோடு ஓடிக்கொண்டிருப்பார்கள்.‌இதன் மத்தியில் ஒரு அக்கா ஸ்டூல் போட்டு மல்லிகை பூ கட்டி கொண்டிருப்பார்.  அந்தி  வேளையில் பூவிற்கு என்ன வேலை இருக்கக்கூடும்?
ஆம் உங்கள் mind voice correct தான்.  அமைதிப்படையில் சத்தியராஜ் கொடுக்கும்  அதே மல்லி பூ தான். பூக்களும் அல்வாகளுமே பல foreplay-க்களின் ஆரம்ப புள்ளியாக அமைகிறது.‌இது எல்லாம் நடப்பது மாலை பொழுது.

அதற்காக மல்லி பூவும் அல்வாவும்  மட்டுமே foreplay ஆரம்பிக்க அவசியமாக தெரியவில்லை.இரவு பாத்திரம் கழுவி முடிக்க லேட் ஆகும் என்று வீட்டில் எல்லோருக்கும் swiggyயில் பிரியாணி, புரோட்டா வாங்குவது‌ம்.... குழந்தைகளை சீக்கிரம் தூங்க வைக்க , அவர்களின் homework ஐ முடிக்க உதவுவதும்....விஜய் டிவியில் "பாரதி கண்ணம்மா" முடிய‌ 10 ஆகும் என்பதால் hotstar vipல் 6 மணிக்கே போட்டு பார்க்க வைப்பது வரை எல்லாமே மாலை பொழுதை சீக்கிரம் ‌விரட்ட‌ எண்ணும் காதல் வேதனைகளுள் சில..

இப்படி யோசித்து கொண்டு இருக்கும் போது தான், தோழர் Mr.வள்ளுவர் கண்ணில்பட்டார். (தோழர் தான்... இது செங்கிஸ் படிச்சு காண்டாவட்டும்)..  google ஆண்டவரை‌ தேடும் போது இந்த குறள் கிடைத்தது. 

குறள்: 1221
பொழுதுகண்டு இரங்கல்

"மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது."

"அடேய் சாயங்காலம், சீக்கிரம் முடிஞ்சு போகாம இன்னும் ‌என்‌‌ உசுர வாங்குறியே... நல்லா‌ இருடா... நல்ல்ல்ல்லா‌ இரு"

 இந்த குறளின் தாக்கம் தான் மேலே குறிப்பிட்ட பாடலில் வந்திருக்கும் என நம்புகிறேன். இதை போலவே ராஜாவின் "பொத்தி வச்ச மல்லிக மேட்டு" ‌ பாட்டிலும் ஒரு வரி வரும். மெதுவாக பாண்டியன் ரேவதியை மடியில் கிடத்த , ரேவதி பாடுவார்

"இது சாயங்காலமா... மடிசாயும் காலமா..
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாத்து சூடு ஏத்துது"

எது எப்படியோ. தாய் கிழவி சொன்னது போல ஏழு கடலை (விட கனமான காதலை) குறுகத் தரித்த குறள்‌‌ தான்.  நம் education system-ல் அறத்துப்பால் பொருட்பால், போல காமத்துப்பாலை சொல்லி கொடுக்கவில்லை. முக்கால்வாசி பேர் xxnx - ல் தான் கற்று கொள்கிறார்கள்.
தோழர் Mr.வள்ளுவரை விட அழகாக காதலை கொண்டாடியவர் எவரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
 இன்னும் படிக்க வேண்டும். படிப்போம்.

ஜன்னல் - சிறுகதை

corona-வின் கொடூரங்களை செய்திகளில் பார்த்து களைத்து போய் இருக்கையில், மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள iPad-ஐ எடுத்து, YouTube-ல் இளையராஜா-வை இசைக்க‌ செய்தேன்.... 

உலகின் தீர்ப்பு நாள் வந்து விட்டது போல தோன்றியது.‌ என்றோ ஒர் நாள் உலகம் அழியும் என‌த் தெரியும். ஆனால் என் காலத்தில் நடக்கும் என்று ‌நினைக்கவில்லை. நம்பவில்லை.

வெளிச்சம் கசியும் ஜன்னலை பார்த்துக் கொண்டே cigarette-ஐ பற்ற வைத்தேன்.

"மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
………
இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
…………"

புகையின் ‌‌ நடுவே அவளின் நினைவுகள் படர்ந்து வளர்த்தது... பாடல்களுக்கும், வாசனை திரவியங்களுக்கும் ஒரு சிறப்பு ‌உண்டு... அதை கேட்கும் போதோ நுகரும் போதோ நடந்த நிகழ்வுகளை மூளை நம் மனதின் முன் நிறுத்தும். அவளின் medimix soap-வும், வாசனை எண்ணெய் கலந்த மணம்‌ அடிப்பது போல் தெரிந்தது.

mobile-ஐ எடுத்து அவளின் எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். 

"ஹலோ, யாரு ?" ஒரு ‌சிறுமி எடுத்தாள்.

"செல்வி இருக்காங்களா?" என்றேன்

"ஒரு நிமிஷம்.." என்று அவளிடம் தந்தாள்.

"ஹலோ... சொல்லுங்க... யார் பேசுறது?"‌, செல்வி

"நான் சுந்தரம் ‌பேசுறேன். சுந்தரமூர்த்தி."

"எப்படி இருக்கீங்க.."

"நல்லா இருக்கேன்..நீ எப்படி ‌இருக்க?"

"ம்ம்.. கீதா நல்லா ‌இருக்காங்களா? என்ன ‌இந்த நேரத்தில.. வீட்டில எதுவும் ‌விஷேசமா? "

"இந்த ‌corona‌ ஊர் பூரா பரவிட்டு இருக்கு.. அதான் உன்ட பேசனும் போல இருந்துச்சு..."

"ஆமா, நாங்க கூட வெளியே போறதே இல்வ. news channel பாத்தா நோய் வராதவனுக்கு கூட வந்துரும் போல.. நீங்க safe ஆ இருக்கீங்களா?"

"இருக்கோம். "

"ம்ம்... அப்பறம்..?"

குரலை சரி செய்து தயங்கியபடி "எப்படி சொல்றதுனு தெரியல... நான் உன்ன ரொம்ப love பன்னுனேன்...பன்றேன்.. உனக்கு தெரியுமா?"

"……"

"நிறைய time உன்ட சொல்லனும்னு தோணும். பயம். இப்ப உலகமே அழிய போகுதோனு தோணுது.. அதான்..."

"……"

"ஏதாவது பேசு"

call-ஐ கட் செய்து விட்டாள்.அவள் அழுதது போல் சத்தம் கேட்டது.

சிகரெட் தீர்ந்து விட்டது. அடுத்து எடுத்து பற்ற வைத்தேன்.. இளையராஜா இசைத்து கொண்டு ‌இருந்தார்.

"………
உதட்டில் துடிக்கும் வார்த்தை
அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும்
ஓசை இசையாகாதோ
………...."

"போன்ல யாரு?" என்று காபியோடு கீதா ரூமிற்குள் வந்தாள்.

"பழைய friend!!!"

"இந்தாங்க. ஆறி போறதுக்குள்ள குடிங்க." என்றவாறு ‌என்‌ அருகில் இருக்கும் சேரில் அமர்ந்தாள்.

இருவரும் ‌ஜன்னின் வெளிச்சதை ‌ரசிக்க தொடங்கினோம்..

அன்புள்ள தளபதிக்கு

அன்புள்ள தளபதிக்கு,

உன் நெஞ்சில் குடி இருக்கும் அன்பான ரசிகர்கள்ல நானும் ஒருத்தன். சாதாரன அகா துகா ரசிகனெல்லாம் இல்ல. உன் first look-ஐ DP ஆ வைக்கிற, wallpaper ஆ வைக்கிற..உன் பாட்ட ringtone ஆ வைக்கிற..உன் trailer-ஐ 100 தடவ பார்த்து, 10frames-ஆ screenshot எடுத்து, 1000 பேருக்கு share பண்ணி views ஏத்த நினைக்கிற...உன் படம் வரும் போது, தெரிந்த நண்பனின், அதுவர contact-ஏ இல்லாத ரசிகர் மன்ற சொந்தகாரனுக்கு போன் போட்டு ,சண்டை போட்டு, அப்பறம் கெஞ்சி கூத்தாடி, டிக்கெட் வாங்கி,  theater உள்ள போகும் போது கூட்டத்தோட அஜித்த கெட்ட வார்த்தைல திட்டி, கடைசியா உன் பேர் screen-ல வரும் போது,  சீட்ல ஏறி கத்துற ரசிகர்கள்ல ஒருத்தன்.

'இதெல்லாம் ஒரு  matter-ஆ ? '-னு மிக எளிமையாக இதை கடந்து போகலாம். ஆனால் ஊருக்கு 1000 பேர் இருக்கும் மன்றத்தால் மட்டும், உன் படம் 100 கோடி கொடுப்பதில்லை. என்னை போன்ற banner-ல் முகம் தெரியாத லட்ச கணக்கான உன் 'நண்பர்கள்' தான் உன் முதுகொலும்பு.

என்னடா 'நீ நான் '-னு மரியாத இல்லாம பேசுறேன்னு நினைக்காத. வீட்டுல அப்பா அம்மா ,அண்ண அக்கா மாதிரி மனசுக்கு நெருக்கமானவங்கலாம் அப்படி தான சொல்வாங்க.  So cool bro.

சரி. என்னைகாச்சும் நீ வேல செய்யாத  ஒன்னு நல்லா வரனும்னு,ஜெய்ச்சிரனும்னு கடவுள்ட்ட வேண்டிருக்கியா. நான் வேண்டிருக்கேன். உன் படம் வர, முந்தின நாள், ராத்திரி fulla உக்காந்து வேண்டிருக்கேன். ஏன்னா அப்பதான் அடுத்த நாள் நான் office போக முடியும். நிம்மதியா வேல பாக்க முடியும். ஏன்னா, நீ தான் நான். ஆமா உன்ன தான் நான் எங்க office ல represent பண்ணறேன். என்னைய மாதிரி நிறைய வீட்லயும், office-லயும்,பொது இடத்திலயும் உன்ன represent பண்றவன் இருப்பான்.நாங்களாம் படம் நல்லா இருந்துச்சுனா, 'ஓத்தா செம மாஸ்'னு Fb ல கொத்தா  status போட்டு, அப்பறம் சொந்த காச போட்டு teammates, friends, family னு எல்லாரையும் படம் பாக்க வச்சுருவோம். அதே படம் நல்லா இல்லனா 10steps back. என்ன என்ன அசிங்கமா கேள்வி கேப்பான்னு முன்னாடியே யோசிச்சு, அதுக்கு counter யோசிச்சு, meme யோசிச்சு, கொஞ்ச நாள் சத்தமே இல்லாம office போய்ட்டு வருவோம். ஏன்னா 10 நாளுக்கு நம்மல அத சொல்லியே ஓட்டுவாங்க. உனக்கு தெரியுமா, புலி வந்த அப்போ அடுத்த நாள் office க்கு leave. சுறா வந்த அப்பலாம் ரொம்ப மோசம். ஒரு கல்யாண வீட்ல ஒரு பெருசு, " தம்பி, நீ விஜய்  fanஆ" னு கேக்க , நான் "ஆமா" னு சொல்ல சுத்தி இருந்தவன் எல்லாம் சிரிச்சுட்டான். Puppy shames of India. இதேல்லாம் தாண்டி என்னைக்கும் நீ தான் என் தளபதி.

"ஏன்டா அவ்ளோ கஷ்டபட்டு என்னைய follow பண்ற"னு கேக்கிறியா. சத்தியமா தெரியல. என் childhood days யோசிச்சு பாக்குறன். நீ தான் என் all time favorite hero. அப்போ ஆரெம்கேவி விளம்பரத்துல வர  மாதிரி வெள்ளயா இருக்கிற hero லாம் என் மனசுல ஒட்டவே இல்ல. உன்ன பாத்தா தான்,  எங்க தெருல நல்ல கிரிக்கெட் ஆடுர நாகராஜ் அண்ண மாதிரி, எங்க school people leader தினேஷ் அண்ண மாதிரி, பஸ்ல எங்க area-கு சண்ட போட்ட குமார் அண்ண மாதிரி எங்கள் ஒருத்தனா நீ இருந்த. அதான் உன்ன புடிக்க காரணமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். உன்ன மாதிரி முடி வெட்டி,  உன்ன மாதிரி dress வாங்கி, நீ போட்ட மாதிரியே கழுத்துகுள்ள dollar இல்லாத 5ரூபா chain போட்டுகிட்டு,உன் பாட்டு புக் 50p வாங்கி மனபாடம் பண்ணிட்டு சுத்தினதுலாம் ஞாபகம் வருது.

சரி பழசெல்லாம் இப்ப எதுக்கு பேசுகிட்டு. சர்கார் படம் பாத்தேன். அரசியலுக்கு வர போல?.  Recent ஆ வந்த நிறைய படத்துல அத sense பண்ண முடிஞ்சுது. ஆனா இவ்ளோ சீக்கிரம் வருவ,அதுக்குனு ஒரு படம் எடுப்பனு நினைகல. நமக்கு எதுக்கு தலைவா அரசியல்லாம்? Jolly-ஆ படம் நடிச்சோமா, சமூகத்துக்கு 4 நல்ல கருத்து சொன்னோமானு இருக்கலாமே. Pls bro வேணாம். அது என்ன சினிமால பெரிய ஆளா ஆகிட்டா, direct ஆ  CM ஆக ஆசபடுறீங்க. உடனே 'எங்களுக்கு  rights இல்லையா'னு கேக்காத. இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி உரிமை இருக்கு. ஆனா உனக்கு மாதிரி எனக்கும் இருக்கு. என் பக்கத்து வீட்டுகாரனுக்கும் இருக்கு. ஆனா நாங்க election-ல நின்னா உன்ன மாதிரி ஓட்டு வாங்குவோமா? ஏன்னா சினிமா புகழ். Exampleக்கு.  ஒருத்தன் நல்ல கொள்கை, கோட்பாடு, திட்டத்தோட வரான். அவன் மக்கள்ட்ட போய் சேர்ந்து, திட்டத்த புரிய வச்சு, அத மக்கள் நம்பி convince ஆகி, ஓட்டு வாங்கி ஒரு தொகுதில win பண்ண 20வருசம் ஆகும்.  ஆனா சினிமால இருந்து வந்தா, இந்த steps லாம் skip பண்ணிட்டு direct-ஆ  CM  ஆக வரீங்க. அதுனால என்ன problem-னு கேக்கிரியா? டெங்கு மாதிரி நோய் பரவ காரணமா இருக்குறது சுகாதாரதுறை-னு கூட தெரியாம வரீங்க.  இலவசம் அரசாங்கம் ஏன் குடுக்குதுனு சின்ன  சமூக புரிதல் கூட இல்லாம வரீங்க.  முதல்ல அது இலவசம் இல்ல. விலையில்லா பொருள்.  நீ bodyguard-அ காவலன்னு படம் எடுத்து 18 % வரி சலுகை வாங்குனல. அது மாதிரி இல்லாத மக்கள் 100% சலுகைல பொருள் வாங்குராங்க. இந்த புரிதல் இல்லாம தான்  CMக்கு ஆசபடுரீங்க. ஒரு வேல அந்த வரி சலுகை இப்ப இருக்குனா, 'சர்கார்' படம் 'அரசியல்'-னு வந்துருக்கும். அரசியல் வேணாம் தலைவா.இனிமே 'அரசியல்' மாதிரி எந்த படமும் வேணாம்.

இப்பவே பாரு. நீ சென்னது நம்பி நிறைய பேர் mixy grinder எரிக்குரா மாதிரி வீடியோ போடுறான். யோசிச்சு பாரு, நீ ஆட்சி அமைச்சா, இந்த group-ல இருந்து ஒருத்தன் தான் நிதி அமைச்சரா வருவான். எல்லா group-லயும் ஒரு bijili ramesh இருக்கான் போல. Already தமிழ்நாடு, லாரி tyre-க்கு நடுல மாட்டுன எலி மாதிரி இருக்கு. இன்னும் நசுக்காத.உடனே 'MGR  மாதிரி ஆட்சி அமைப்பேன்'னு செல்லாத. அவர் ஆட்சி ஒன்னும் பொற்கால ஆட்சி இல்ல. Security-லாம் கல்வி தந்தை ஆனதும், குப்பம், கடற்கரை ஆன வரலாறுலாம் படிச்சு பாரு.

இதுக்கு அப்புறமும் " இதான் நம்ம சர்கார்"னு சொன்னா,சாரி ப்ரோ.ஆனா, இப்பவும்  உன் படம் வந்த FDFS தான். வேற படத்துல உன் reference வந்தா, எல்லோரும் திரும்பி பாக்குற மாதிரி விசில் அடிப்பேன். உன் pic தான் dp wallpaper. உன் பாட்டு music channel ல வந்தா பாப்பேன், வீட்டையே பாக்கவைப்பேன். சினிமால நீ தான் என் தளபதி. ஆனா ஓட்டு உனக்கு இல்ல. தலைவன் வடிவேலு dialogue ல சொன்னா புரியும்.

"பழக்க வழக்கம்லா படத்தொட இருக்கனும்,
CM ஆகுறேன்  வேலைலாம் வச்சிக கூடாது. தெரியுதா? "

இப்படிக்கு,
உன் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகன்.

சிவப்பு - சிறுகதை

அடர்த்தியாக மழை பெய்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்த அந்த இரவில்,  கரு நிற முகத்தில் மஞ்சள் நிற சாந்து பொட்டு போல தூரத்தில் ஓர் பேருந்து நிறுத்ததின் மஞ்சள் வெளிச்சம். உற்று பார்க்கும் போது அங்கு ஓர் பெண் தனியாக நிற்பது தெரிந்தது. விரைவாக நடக்க ஆரம்பித்தேன். மூச்சு வாங்கியது. அருகே செல்ல செல்ல அவள் உருவம் மட்டும்  தெளிவாக தெரிய ஆரம்பித்தது. பேருந்து நிறுத்த வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தேன்.சுற்றி இருக்கும் இருளும், உடலை கவ்வும் குளிரும் என்னை என்னவோ செய்தது. நான் வந்ததை அவள் கண்டு கொள்ளவில்லை. திரும்பி நின்று யாரையோ தேடிக் கொண்டிருந்தாள். 

தங்க நிற ஜரிகை வைத்த சிவப்பு நிற சேலையும், heels  இல்லாத செருப்பும் அணிந்திருந்தாள். மஞ்சள் வெளிச்சத்தில் சிவப்பு நிறம் அவளின் வடிவத்தை நன்றாக எடுத்து காட்டியது. Tyre advertisement -ல் வரும் கார் போல அவள் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி சென்றது என் கண்கள்.  அவளின் முதுகில் பாதியை காட்டும் blouse அணிந்து, அதன் மேலே வட்ட கொண்டையில் கனகாம்பரம் சுற்றி வைத்து தன்னை அழகுபடுத்தி இருந்தாள். 

அவளின் முகத்தை பார்க்க வேண்டும் என எத்தனித்து, குரலை சரி செய்வது போல சத்தமிட்டு என் இருப்பை பதிவு செய்தேன். அவள் திரும்பவில்லை. மெதுவாக என் செருப்பை தரையில் தேய்த்து  அவள் அருகில் சென்றேன். அப்போதும் திரும்பவில்லை. cake நடுவில் தெரியும் cream போல மாநிறத்தில் அவளின் இடுப்பு மட்டும் கண்ணுக்கு தெரிந்தது.  அவளை தொட்டு அழைக்க மனம் ஏங்கியது. இன்னும் அருகில் சென்றேன். என் மூச்சு காற்று அவள் கழுத்தில் விழுந்திருக்கும். இருந்தும் அவள் அசைவில்லாமல் நின்றிருந்தாள். அவள் பூவில் இருந்து வாசனை இல்லை. எந்த எதிர்ப்பும் காட்டாததால் என் கை அவள் இடுப்பிற்கு சென்றது. குளிரோ பயமோ கை நடுங்கியது. Slow motion -ல் என் கை அருகில் அவள் செல்ல , அவள் உடம்பின் சூட்டை நான் உணர, என் நெஞ்சு சூவற்றில் யாரோ paint brush-ஆல் படம் வரைவது போல உணர்ச்சி மேலிட, மூளையில் சூடான இரத்தம் பாய்ச்சுவது போல் இருந்தது.

அவளை தொடும் அந்த நிமிடத்திற்குள், என்னை யாரோ காலில் தட்டுவது போல தெரிந்தது. திரும்பி பார்ப்பதற்க்குள் அங்குள்ள விளக்கு அணைந்தது. இருள் சூழ்ந்தது. அவள் மறைந்தாள். சுற்றி மழை இல்லை. படம் ஆரம்பித்த பின், தியேட்டர் கதவை திறக்கும் போது fade in ஆகும் சத்தம் போல்,  மெதுவாக நிஜ உலகின் இரைச்சல் என் காதை நிறைத்தது.  கனவில் இருந்து வெளி வந்ததை உணர்ந்தேன். காலுக்கு அருகில்,"சாரி தாத்தா... தெரியாம கால மிதிச்சுட்டேன்" என்று பள்ளி கிளம்பும் அவசரத்தில்,  uniform -ஐ அணிந்து கொண்டிருந்தான் பேரன். கனவொன்னும் சொர்க்கவாசல் அடைத்தது.

'பரவால டா.. ' என்பது மெல்ல சிரித்து தலையை ஆட்டி, படுக்கையில் இருந்து எழ முயன்றேன். முடியவில்லை. முட்டி வலித்தது.
"செல்லம், தாத்தாக்கு கை குடு பாக்கலாம்.. ". அவன் என் கையை பிடித்து, அவன் தோளில் வைத்து "சங்கிலி கருப்பேஏஏஏஏஏஏஏ... " என்று கத்தியவாரே இழுந்தான். நானும் இன்னொரு கையை தரையில் ஊன்றி எழுந்தேன்.

எழுந்து லுங்கியை சரி செய்தவாரே,  "யாருடா சங்கிலி கருப்பு?  " 

"மெர்சல் படம் தாத்தா..உனக்கு தெரியாது. "

"bro,  எனக்கு தெரியும் bro.. 'நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று' தான..." என சிரித்து கொண்டே,  "நான் பத்த வச்ச நெருப்பு நீங்க தான் செல்ல குட்டிகளா" என்று கன்னத்தை கிள்ளி முத்தம் கொஞ்ச..

"எனக்கு time ஆச்சு நான் கிளம்ப போறேன்.. " என்று பள்ளி பையை எடுத்து வைக்க ஓடினான்.

காலை கடனை முடிக்க பாத்ரூமிற்கு சென்றேன். ஆனால் ஒன்றில் மகன் குளித்து கொண்டிருந்தான். இன்னொன்றில் மருமகள் இருந்தாள். வார நாட்களின் காலை வேளையை புரிந்து கொண்டு வெளியே வந்து அமர்ந்தேன். மனைவி கிட்சனில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். ஓய்வு பெற்ற பின் என் காலை, 9 மணிக்கு பின் தான் தொடங்கும். வெளியே அமர்ந்து நாளிதழை படிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் மகனும் மருமகளும் கிளம்பி வந்தார்கள். எல்லோரும் 'bye' காண்பித்து கிளம்பினார்கள். வீடு அமைதி ஆனது. மனைவி மட்டும் கிட்சனில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

நான் வருவதை பார்த்து "காப்பி வேணுமா? " என்றாள்.

"குளிச்சுட்டு வரறேன்" என்று அடக்கி வைத்த காலை கடனை முடிக்க சென்றேன். குளித்து முடித்து சாமி கும்பிட்டு திருநீறு அணிந்து ஹாலில்  tv  முன் அமர்ந்தேன்.மனைவி சூடாக இட்லியும் சட்னியும் தந்தாள். ஜெயா டிவியில் தேனருவி ஓடிக்கொண்டிருந்தது. பின் சூடாக காபி வந்தது. தேனருவி bore  அடிக்க TV channel -ஐ மாற்றிக் கொண்டே வந்தேன்.  ஒரு கேபிள் சேனலில் பிரசாந்தும் கிரணும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

"...நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்..சட்டென்று நான் விழுந்தேன்....." என பாடிக் கொண்டே கிரண் கடலில் விழுகிறாள்.

பாட்டும் காப்பிம் மூளையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது.  எழுந்து கிட்சனுக்கு சென்றேன். அங்கே தரையில் அமர்நது மனைவி இட்லி மாவு அரைக்க அரிசி அளந்து கொண்டிருந்தாள். பாதி சேலையை இடுப்பில் சொருகி இருந்தாள். இன்றும் அவள் மீது வியர்வையும் கொத்தமல்லியும் கலந்த வாசம். அவள் அருகில் அமர்ந்து, "என்ன பண்ற?"

"மாவு அரைக்கனும்.. அதான் அரிசி ஊற வைக்க போறேன்.. என்ன வேணும்..  பசிக்குதா...?  "

"ஆமாடி பசிகுது.. "

"நான் வேணா தோச சுடவா..?" என்று எழுந்தாள்.

"வயித்து பசி இல்ல.. " என்று கை பிடித்து மடியில் படுக்க வைத்தேன்

கையை உதறிவிட்டு, "பசிக்கும்யா நல்ல பசிக்கும்... அர மண்டை ஆன அப்பறமச்சும் அடங்குதான்னு பாரு... போய் TV பாருங்க. போங்க" என்று சிரித்து கொண்டே எழுந்தாள்.

"உன்ன தொட்டு 5 வருசம் ஆச்சு.. ஓரே ஒரு வாட்டி டி...  Pls... " என்று எழுந்து அவள் அருகில் சென்றேன்.

"விளாடாதீங்க... யாராச்சும் வந்தா... சிச்சீ.. இந்த வயசுல...  வயசுக்கு ஏத்த மாதிரி அறிவும் இருக்கனும்.. வெவஸ்த்த இல்லாம.. போங்க அங்கிட்டு..  சும்மா கேக்குறீங்கனு பாத்தா... " என்று கோபித்து கொண்டு என்னை துரத்தினாள்.

எனக்கு வெட்கமாகவும் கோபமாகவும் இருந்தது. சிறு வயதில் பல முறை நான் கேட்டு வேண்டாம் என்றிருக்கிறாள். அப்போது வந்திடாத கோபம் கலந்த இந்த உணர்வு எனக்கு புதிதாக இருந்தது. கிட்சனில் இருந்து வெளியே வந்து அமர்தேன். டிவி பார்க்க பிடிக்கவில்லை.  போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தேன்.  Whatsapp முழுவதும் msg-களால் நிரம்பியிருந்தது. குடும்ப குருப், வாக்கின் குருப், என்று பல குருப்களில் add பண்ணி இருந்தார்கள். ஏதோ ஒரு குருப்பில் ஓர்  video இருந்தது. கிளிக் செய்தவுடன்  YouTube  open  ஆனது. ஏதோ ஓர் படத்தின்  trailer ஓடியது. நாயகன் இங்கும் அங்கும் தாவிக் கொண்டிருந்தார். வீடியோ பார்த்து முடித்தவுடன் 'suggestions ' என பல வீடியோகள் வந்தது. கீழே ஒரு வீடியோ  "18 வயது பெண் செய்யும் காரியத்தை பாருங்கள் "  என்று ஒரு விதமான போட்டோ போஸ் இருந்தது.ஆர்வம் அதிகமானது. கை நடுயவாரே கிளிக் செய்தேன். ஆனால் உப்பு சப்பு இல்லாமல் அதில் ஒரு பெண் ஏதோ ஹிந்தி பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் ஆனது போல் இருந்தது. ஆனால் கீழே suggestions-ல் எண்ணற்ற 'அந்த' வீடியோக்கள் கண்தில்பட்டது.

அதில் ஒரு பெண் சிவப்பு சேலை அணிந்து திரும்பி நிற்பது போல் போட்டோவுடன் "தமிழ் பெண்ணின் அந்தரங்க selfie வீடியோ"  என்றிருந்தது. கனவில் பார்த்த அதே உருவம்.  கிளிக் செய்தேன். 
அந்த பெண்  முகத்தை காட்டாமல் திரும்பி நின்றிருந்தாள். குனிந்து எதையோ எடுத்து மேலே பரனில் வைத்து கொண்டிருந்தாள். கனவில் பார்த்த அழகான அதே நெளிவு சுளிவுகள். ஆனால் தலையில் பூ இல்லை.முன்னால் fan இருக்கும் போல. காற்றில் அவள் தலை முடி அசைந்தது. அவள் சேலையும் சேர்ந்து அசைந்தது. அவளது சேலை முந்தானை விலகி பறக்க முயல, அதை ஒற்றை விரலில் புடித்து கொண்டிருந்தாள். அலையலையாய் சேலையும், அதில் நுரையாய் முடியும் நிறைந்து அவள் கடலில் என் மனம் மிதந்து கொண்டிருந்தது. என்ன நினைத்தாளோ, விரலில் பிடித்த முந்தானையை விட்டுவிட்டு, கடலின் மேல் நிலவாய் அவள் முகம் காட்டி, கைகளால் பாதியை மறைத்து, வெட்கத்தோடு மீண்டும் திரும்பி கொண்டாள். பின் தன் நெஞ்சுக்குள் கையை வைத்து அடுத்த கட்டத்திற்கு சென்றாள்.  திடீரென்று வீடியோ சுற்ற ஆரம்பித்தது. வீடியோ  load ஆகவில்லை. மனம் படபடத்தது. ஜியோவை திட்டியது. ஜியோகாரனை வெறுத்தது, அடித்து கொல்ல கூட தோன்றியது.

அந்த சில நொடிக்குள் "குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.. குறை ஒன்றும் இல்லை கண்ணா..."  ரிங்டோன் அடித்து, போனின் திரையில் 'Sandhiya calling' என்று வந்தது.  மகள் அழைக்கிறாள். முகம் வியர்த்து, கை நடுங்கியது.

"ஏங்க... உங்க போன் தான் அடிக்குது.. யாருனு பாருங்க.. " என்று உள்ளே இருந்து சத்தமிட்டாள் மனைவி.

அழைப்பை எடுக்க மனம் இல்லை. "இல்ல.. யாரோ advertisement.." என்று கட் பண்ணிவிட்டேன்.

மீண்டும் வீடியோ விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது. எனக்கு சங்கோச்சமாகவும் வெட்கமாகவும் இருந்தது. வீடியோவில் அவள் திரும்பி ஆடையை கலட்ட ஆரம்பித்தாள். அதில் அவள் முகம் தெரியவில்லை. என் மகளின் முகமாய் தெரிந்தாள். தர்மசங்கடமாக இருந்தது. போனை அணைத்து,  tv வைத்தேன். இந்த முறை தெளிவாக news சேனல்.

அதில் " 11 வயது சிறுமியை 7 மாதமாக பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகள் கைது" என்று செய்தி ஓடியது. கைதானவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேலானவர்கள். என் வயதொத்தவர்கள். எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவர்கள் கையில் விலங்கு இருந்தது. என் கையில் இல்லை. அவ்வளவே வித்தியாசம்.

Biopic

இந்த வாரம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ஓர் படமாக வந்திருக்கிறதாம்.  சமூக வலைத்தளம் முழுவதும் அவரை பற்றிய பதிவுகள், குறிப்புகள்.  கூடவே தொலைக்காட்சியிலும் அவரை பற்றிய தொகுப்புகள். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் நான் படித்த வரை அவர் நல்ல கலைஞர். அவர் நல்ல நிலையில் இருக்கும் போது நிறைய பேருக்கு உதவியிருக்கிறார். பின் குடிக்கு அடிமையாகி இறந்திருக்கிறார்.

என் கேள்வி என்னவென்றால்,
அவரின் biopic பார்த்து நான் என்ன புடுங்கபோகிறேன். இல்லை அது என் வாழ்வில் என்ன மயிர மாற்றபோகிறது.  Atleast இந்த சமூகத்தில் ஓர் மாற்றம் வந்தாலும் ஏற்று கொள்ளலாம்.  இப்படி எனக்கு தேவையே இல்லாத கசடுகளை என் மூளைக்குள் ஏற்றி இந்த சமூகத்திற்கு தேவையானவற்றை சிந்திக்க இடமில்லாமல், மூளை நரம்பிவழியும் போது , ஓட்டு கேட்டு என் 5 வருட சமூக  அரசியலை என்னிடம் இருந்து பிடிங்கிவிடுகிறார்கள். இந்த படம் கற்பனை கதை உள்ள, 3 மணி நேரம் பார்த்து ரசித்து, சிரித்து கடந்து மறந்து செல்ல சாதாரண படம் அல்ல.  ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்கள் வைத்து நமக்கு கொடுக்கபடும் ஓர் document. இது தான் பின் வரும் தலைமுறையின் reference-கள். எனக்கு சாவித்திரி மீதோ, அந்த படத்தை எடுத்த, நடித்த கலைஞர்கள் மீதோ தனிப்பட்ட கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் தமிழகம் இருக்கும் சூழ்நிலையில் இப்போது இந்த படம் தேவையா? எத்தனையோ தலைவர்கள் பற்றி சரியான திரைப்படம் இல்லாத போது சாவித்திரி பற்றி நாம் எதற்கு தெரிந்து கொள்ள வேண்டிம் என்பதே என் கேள்வி.

மேலும் மக்களுக்கு சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது. முக்கியமாக அரசியல் முடிவு எடுப்பதில்.  'தேசிய கட்சி தேவையா? , மாநில கட்சியே போதுமா?, திராவிடம் உண்மையில் நன்மை செய்ததா? , வலதா வேண்டுமா? ,
இடதின் தேவை இருக்கிறதா?  மய்யம் என்றால் என்ன?'  இப்படி எண்ணற்ற கேள்விகளுக்குள் சிக்கி இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு சாவித்திரியின் வாழ்க்கை படமா தேவை.  அரசியல் கருத்துக்களை பிரதிபளிக்கும் தலைவர்கள் வாழ்க்கை படம் தானே தேவை.

சினிமா என்னும் கலை இயந்திரம் இந்த தமிழ் சமூகத்தின் வாழ்வியலை மாற்றிய வரலாறு இருந்தும், இதை முன்னேடுக்க எவரும் இல்லை என்பது தான் வருத்தம். கொடுமை என்னவென்றால் அந்த  சினிமாவில் இருந்தே 2 பேர் அரசியலில் குதித்துருக்கிறார்கள்.

காலரை தூக்கி கருப்பு சட்டை அணியும் கமல் , ஏன் பெரியாரின் biopic-ல் எடுத்து  நடிக்க கூடாது. மய்யத்தில் அமர்ந்து மீசையை முறுக்குவது மட்டும் வீரமல்ல. எதிர்த்து நின்று கருத்துகளை பரப்ப வேண்டும். மக்களுக்கு புரியும்படியாக.

காமராசர் ஆட்சி  அமைப்பேன் என தமிழருவி மணியன் முலம் கூறும் ரஜினி, அவரின் biopic-ல் நடிக்க வேண்டாம். At least தயாரிக்கலாமே. ஆனால் எதும் பண்ணாமல் நேரடியாக முதலமைச்சர் நாற்காலி மீது குறி வைப்பது என்ன நியாயம்.

அவர்களை கூட மன்னிக்கலாம். 'திராவிட இயக்கமே வேண்டாம்' என YouTube -ல்  கதறும் சிமானின் பேச்சை நம்பும் நிறைய நண்பர்களை நான் கடந்திருக்கிறேன். இன்றைய நிலையில் உண்மையில் திராவிடத்தின் பெயர் சொல்லும் ஒரே கட்சி திமுக. சிமானின் பேச்சை நம்பும் இளைஞர்களுக்கு அறிவூட்டுவது திமுகவின் கடமை அலல்வா. ஆனால் எதும் பண்ணாமல் 'மூன்றாம் கலைஞர்' என flex மட்டும் வைத்த கொள்ள எப்படி மனசு வருகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக அவரே படமேடுத்து நடித்து மக்களின் உயிரை வேறு வாங்குகிறார்கள்.

திடீரென்று ஒரு நாள் சேனல் மாற்றும் போது வசந்த் டிவியில் காமராசர் படம் பார்த்தேன். உண்மை காங்கிரஸ்காரர் பார்த்தால் அழுதுவிடுவார். ஆனால் புரட்சி தமிழன் சத்யராஜ் நடித்த பெரியாரின் படம் அப்படி இல்லை. பார்க்கலாம். இருந்தும் , இது மக்களிடம் எதிர்பார்த்த அளவு சென்றடையவில்லை. காரணம், அந்த படம் documentary mode-ல் மக்களோடு ஒட்டாமல் இருக்கும். மக்களுக்கு documentary பார்க்க பொறுமை இல்லை. ஆம். மக்களுக்கு பொறுமை இல்லை தான்.  தன் வாழ்க்கைக்கு சம்பாதிக்க வேகமாக ஓடுபவனை, பொறுமையாக அமர்ந்து documentary பார்க்க சொல்வது எவ்வளவு அபத்தம். அவனுக்கு எளிதாக, சுவாரசியமாக சொன்னால் தான் பிடிக்கும். தோனி படம் பார்த்து இருக்கிறிர்களா?  அதை போல. எளிய மக்களின் படமாகவும் பாடமாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வேகமான, பொறுமையற்ற சமூகத்தில் சினிமா அரங்கம் ஒன்றே அரசியல் பாடம் நடத்தப்பட வேண்டிய இடம். புத்தக வடிவில் இருக்கும் பெரியாரின் கொள்கைகளும், பேரறிஞர் அண்ணாவின் மேடை பேச்சுக்களும், ஆதிக்கத்தை எதிர்த்து சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து வளர்ந்து பின் தமிழகத்தையே கைக்குள் அடக்கிய கலைஞரின் வாழ்க்கை வரலாறும் என்றாவது ஓர் நாள் திரையில் மின்னி இளைஞர்களை அறிவூட்ட வேண்டும் என்பதே என் ஆசை.